ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகள் நெருக்கடி காலத்தை எதிர்கொள்வதில் மிக பெரிய பங்காற்றியது என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கலாசாரம், நெருக்கடிகளைச் சமாளிப்பதில் பெரும்பங்காற்றுகிறது. தொழில்நுட்பம் வாயிலாகவும் கலாசாரம் ஒரு உணர்வுரீதியிலான புதுத்தெம்பைப் போல செயலாற்றுகிறது. இன்று நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் நமது தேசிய அருங்காட்சியகம் இது தொடர்பாக பாராட்டத்தக்க முயல்வுகளை மேற்கொண்டிருக்கிறது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிக்கூடங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே டெல்லியின் தேசிய அருங்காட்சியகக் காட்சிக்கூடங்களைச் சுற்றிப் பார்க்க முடியும்.
ஒருபுறத்தில் கலாசார மரபுகளையும் அடையாளங்களையும் தொழில்நுட்பம் வாயிலாக பெருவாரியான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது முக்கியம் எனும் அதே வேளையில், இந்த அடையாளங்களையும், மரபு சின்னங்களையும் பாதுகாக்க தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிக மகத்துவம் வாய்ந்தது.