பெர்லின்:மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி இன்று (மே 2) காலை ஜெர்மன் சென்றார். இதன் தொடர்ச்சியாக மோடியை ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஸ்கால்ச் வரவேற்றார். பின்னர் ஜெர்மனில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்தார். மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த இந்தியர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஜெர்மன் அதிபருடன் இரு தரப்பு விவாதம் தற்போது நடந்து வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய- ஜெர்மன் இணைப்பு கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்தியாவின் பல மத்திய அமைச்சர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கு பெற்றுள்ளனர். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து 5ஆவது முறையாக ஜெர்மனி சென்றுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அளித்த தகவலின் படி இந்தியா-ஜெர்மன் அரசுகளின் 6ஆவது இருதரப்பு பேச்சுவார்த்தை இது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.