டெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசியகீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “140 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைவதாகவும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய அவர், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்றும், மணிப்பூர் மக்களின் பாதுகாப்பிற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் மணிப்பூரில் மீண்டும் அமைதி நிலவும் என்றும் பேசினார்.
மேலும், 2047-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைளில் சமரசம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது இப்போதைய தேவை. ஊழல் இந்தியாவின் திறனை மோசமாக பாதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பது மோடியின் வாழ்நாள் அர்ப்பணிப்பு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், துடிப்பான எல்லை கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த எண்ணத்தை மாற்றினோம். அவை நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல. எல்லையில் நீங்கள் பார்ப்பது எனது நாட்டிலேயே முதல் கிராமம் என்றார்.