பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவில், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜி 20 நாடுகளின் பொருளாதார அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் விவகாரத்தில், அதன் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான தளமாக இந்த கூட்டம் அமைந்து உள்ளது, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் அதனை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் உள்ளிட்டவைகளின் மையமாக திகழும் பெங்களூரு நகரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டு உள்ள பிரதிநிதிகளை வரவேற்கிறேன். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து விவாதிக்க, பெங்களூருவைத் தவிர வேறு சிறந்த இடம் எதுவும் இல்லை.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திற்காக, 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா என்ற முயற்சியை துவக்கினோம். இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், உலகிலேயே மலிவான விலையில் இன்டர்நெட் சேவையை பெற்று வருகின்றனர். இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் வேகத்தை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
இந்தியாவில் ஜன் தன் திட்டத்தின் மூலம், வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டி உள்ளது. இவற்றில் 67 சதவீத கணக்குகள் கிராமப் புறங்களில் துவங்கப்பட்டு உள்ளன. இது டிஜிட்டல் பொருளாதார திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். யுபிஐ உடனடி பணம் செலுத்தும் திட்டத்தின் மூலம், மாதத்திற்கு 10 பில்லியன் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை, CoWIN போர்டல் கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டினோம். வெளிப்படையான கொள்முதல் திட்டத்திற்காக, இ-மார்க்கெட்பிளேஸ், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலை அமைப்பு இ-காமர்ஸ், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்பு தளமான பாஷினி உள்ளிட்டவைகள் இதில் குறிப்பிடத்தக்கவைகள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி? உ.பி தேர்தலில் வாகை சூடுவது யார்?