டெல்லி : 4 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்து உள்ள நிலையில், இன்று மாலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
12 மணி நிலவரப்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில், பாஜக 157 இடங்களையும், காங்கிரஸ் - 70 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் ராஜஸ்தானை பொறுத்தவரை பாஜக 114 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கும் நிலையில், பாஜக 54 தொகுதிகளைல் பெரும்பான்மையாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 65 இடங்களில் பெரும்பான்மையாக உள்ளது. இதனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதேநேரம் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.
இதனால், பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்களும், மாநில பொறுப்பாளர்களும் டெல்லி தலைமை அலுவலகம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று மாலை பாஜக அலுவலகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் தலைமை அலுவலகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
3 மாநில தேர்தல் வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :டிச.6ல் கூடுகிறது இந்தியா கூட்டணி! - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை?