பாரீஸ் (பிரான்ஸ்): இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் நாட்டிற்கு சென்று இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டி அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு சந்தனத்தால் ஆன சிதார் இசைக்கருவியின் மாதிரியையும், அவரின் மனைவி பிரிஜிட் மாக்ரோனுக்கு, சிறப்பு வேலைப்பாடுகள் உடன் உருவாக்கப்பட்ட சந்தனப் பேழையில், ‘போச்சம்பள்ளி இகாத் சேலையையும்’ பரிசாக அளித்து உள்ளார்.
அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு, பிரதமர் மோடி பரிசளித்த சிதார் என்ற இசைக்கருவியின் தனித்துவமான பிரதி, தூய சந்தன மரத்தால் ஆனது என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அழகுற வடிவமைக்கப்பட்டு உள்ள சிதாரின் மாதிரியில், சரஸ்வதி தேவியின் உருவம், சிதார் (வீணை) என்ற இசைக்கருவியை வைத்து உள்ளவாறு உருவாக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது, தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானின் உருவமும் அதில் இடம்பெற்று உள்ளது. இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களாலும், இந்திய கலாச்சாரத்தின் எண்ணற்ற உருவங்களை பிரதிபலிக்கும் சிக்கலான சிற்ப வேலைப்பாடுகளால், சிதார் இசைக்கருவியின் மாதிரி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிட் மாக்ரோனுக்கு சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி இகாத் சேலையை பிரதமர் மோடி பரிசாக வழங்கி உள்ளார். தெலுங்கானாவில் உள்ள போச்சம்பள்ளி நகரத்தைச் சேர்ந்த போச்சம்பள்ளி பட்டு இகாத் துணி, நாட்டின் வளமான ஜவுளி பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதன் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்களுக்கு பெயர் பெற்ற போச்சம்பள்ளி பட்டு இகாத் சேலை, நாட்டின் அழகு, கைவினைத்திறன் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உள்ளடக்கி, இந்திய ஜவுளி உலகின் உண்மையான பொக்கிஷமாக விளங்குகிறது.
பாரம்பரிய உருவங்கள் மற்றும் மலர் வடிவங்களை சித்தரிக்கும் வேலைப்பாடுகள் கொண்ட அந்த அலங்கார சந்தனப் பேழையில், சேலை வைக்கப்பட்டு வழங்கப்பட்டதாக, மத்திய வெளியுறவுத்துறை ( MEA) வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டின் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சருக்கு சந்தன மரத்தால் செதுக்கப்பட்ட யானை 'அம்பவாரி' ஒன்றையும் பிரதமர் பரிசாக வழங்கினார். இந்த அலங்கார யானை உருவம் தூய சந்தனத்தால் செய்யப்பட்டு உள்ளது. சந்தனத்தால் செய்யப்பட்ட யானையின் இந்த உருவங்கள் இந்திய கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்து உள்ளதோடு மட்டுமல்லாது, ஞானம், வலிமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும் வகையில் உள்ளது.
பிரெஞ்ச் நாட்டின் நேஷனல் அசெம்ப்ளியின் தலைவரான யேல் பிரான் பிவெட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி 'கையால் பின்னப்பட்ட காஷ்மீரி பட்டு கார்பெட்' ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். கையால் பின்னப்பட்ட காஷ்மீர் பட்டு கம்பளங்கள் அவற்றின் மென்மை மற்றும் கைவினைத்திறனுக்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது ஆகும். காஷ்மீரி கம்பளத்தின் நிறங்கள் மற்றும் அதன் சிக்கலான முடிச்சு விவரங்கள் மற்ற கம்பளி வகைகளில் இருந்து வேறுபடுகின்றன. காஷ்மீரி பட்டு கம்பளங்கள் வெவ்வேறு கோணங்களில் அல்லது பக்கங்களில் இருந்து பார்க்கும்போது வெவ்வேறு வண்ணங்களைக் காண்பிக்கும் அற்புதமான உள்ளார்ந்த பண்புகளைக் கொண்டுள்ளதே, இதன் சிறப்பியல்பு ஆகும்.
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு பிரதமர் மோடி, மார்பிளால் ஆன இன்லே ஒர்க் டேபிளை பரிசளித்து உள்ளார். 'மார்பிள் இன்லே ஒர்க்' என்பது பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மிகவும் கவர்ச்சிகரமான கலைப் படைப்புகளில் ஒன்றாகும். நுட்பமான செயல்முறையில் விலையுயர்ந்த கற்களின் சிறிய துண்டுகள் பின்னர் வடிவங்களுடன் பொருந்துமாறு மென்மையாக வெட்டப்படுகின்றன. இந்த சிறிய துண்டுகள் பின்னர் பள்ளங்களுக்குள் நழுவப்பட்டு, பளிங்கு மரச்சாமான்களை கலையின் அழகிய மற்றும் வண்ணமயமான தலைசிறந்த படைப்பாக மாற்றப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக, பிரதமர் மோடி, பிரான்ஸ் சென்று உள்ளார். தனது பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத பயணம் ஆக அமைந்து உள்ளது என்றும், பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில், இந்திய வீரர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தது, அற்புதமான நிகழ்வு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: Bastille Day: பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய படை - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!