பெங்களூரு :கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கு பயணம் செய்த பிரதமர் மோடி அங்கு தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்களை ஆய்வு செய்தார்.
அங்கு தயாரிக்கப்படும் 13 ஆயிரம் கிலோ எடை கொண்ட 4 ஆயிரம் கிலோ வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஒற்றை என்ஜின் விமானமான தேஜஸ் விமானத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தொடர்ந்து தேஜஸ் விமானத்தில் ஏறி பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். தேஜஸ் விமானத்தில் பறந்த தனது அனுபவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "தேஜஸ் விமான பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. மேலும் நமது தற்சார்பு திறனை பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்து உள்ளது" என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
மேலும், விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்து கொண்டு நடப்பது, தேஜாஸ் விமானத்தின் அருகில் நின்று கொண்டிருப்பது, அந்த விமானத்தில் அமர்ந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்க வேகமாக பரவி வருகின்றன.
இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்திற்காக 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது தான், பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய அரசு விற்று வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த 2022 - 2023 நிதி ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்து 920 கோடி ரூபாய் அளவிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ராஜஸ்தானில் 3 மணி நிலவரப்படி 55.63% வாக்குப்பதிவு!