டெல்லி:இந்தோனேசியாவில் டிசம்பர் 1ஆம் தேதி ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் தலைமையின் கீழ் முதல் ஜி20 ஷெர்பா கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் தொழில்நுட்ப மாற்றம், பசுமை மற்றும் வாழ்க்கை மேம்பாடு, உணவு, எரிபொருள், உரங்கள் பகிர்வு மற்றும் உற்பத்தி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதித்துவருகின்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தலைமை ஜி20 தலைமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்வீட்டுக்கு, "எனது அன்பு நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நன்றி. ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், இந்தியாவின் G20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ட்வீட்டிற்கு, "உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.