டெல்லி:பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக இன்று(ஜூன் 20) காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், முதல் முறையாக அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதிபர் பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது அமெரிக்கா பயணம் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய பிளாக் போஸ்ட் (Blog post) இணையதளத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார். அதில், "அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்கிறேன். நியூயார்க்கில் நாளை ஐ.நா. சபையின் தலைமையகத்தில் சர்வதேச ஐ.நா. உறுப்பினர்களுடன் சேர்ந்து சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட இருக்கிறேன். அதன் பிறகு, வாஷிங்டன் சென்று, அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்கிறேன். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
இந்தியா-அமெரிக்க உறவுகள் பன்முகத்தன்மை கொண்டவை. இருநாட்டுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தக உறவு உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு எனப் பல துறைகளில் இருநாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அதிபர் பைடன் மற்றும் பிற அமெரிக்கத் தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தை, ஜி20, குவாட் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல், அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் இருவருடனும் அரசு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறேன்.