அகமதாபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்று நிறைவு பெற்ற நிலையில், அகமதாபாத்தில் இன்று (நவ. 19) நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன.
விறுவிறுப்பாக நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்.
இறுதி போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களின் பாராட்டுக்குரிய செயல்திறன், வெளிப்படுத்தப்பட்டது. இன்றைய போட்டியில் அபாரமாகவும், சிறப்பான ஆட்டத்திற்காகவும் டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்" என்று பதிவிட்டு உள்ளார்.
அதேபோல், உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :சாதனையில் டோனியை முந்திய கே.எல்.ராகுல்! அப்படி என்ன சாதனை தெரியுமா?