புனே :கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், முடிவடைந்த மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட். 1) மகாராஷ்டிராவின் புனே நகருக்கு சென்றார்.
பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "தனிப்பட்ட முறையில் நினைவு கூரத்தக்க நிகழ்வு இது. நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். பால கங்காதர திலகர், சுதந்திர போராட்டத்தின் திலகமாகத் திகழ்பவர். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியவர்.
நாட்டில் நிகழும் போராட்டங்களுக்கு எல்லாம் தந்தையாக இருப்பவர் பால கங்காதர திலகர் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கருதினர். விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற அவரது பெயரிலான விருதைப் பெற்றதை கவுரவமாகக் கருதுகிறேன். இளம் திறமையாளர்களை அடையாளம் காண்பதில் லோகமான்ய திலகர் சிறந்து விளங்கினார்.
இந்தியாவின் பயணம் என்பது நம்பிக்கை பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து உபரி நம்பிக்கை என்ற நிலைக்கு சென்று உள்ளது. உபரி நம்பிக்கை என்பது கொள்கைகளிலும், மக்களின் கடின உழைப்பிலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நம்பிக்கை இல்லாத இடத்தில் வளர்ச்சிக்கு இடம் இருக்காது.