டெல்லி: ஒருங்கிணைந்த ஆந்திராவில் 1967 பேரவைத் தேர்தலில் ஜனசங்கம் (பாஜகவின் முன்வடிவம்) சார்பில் போட்டியிட்டு எம்எம்ஏ ஆனவர் ஜங்கா ரெட்டி. பின்னர் 1984இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். முதன்முதலில் இத்தேர்தலில் பாஜக இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.
அதில் வென்ற இருவரில் ஒருவர்தான் ஜங்கா ரெட்டி, இத்தேர்தலில் கட்சியின் முகமாக அறியப்படும் வாஜ்பாய், அத்வானி கூட தோல்வியைத் தழுவினர். பள்ளி ஆசிரியராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த ஜங்கா ரெட்டி கட்சியின் இக்கட்டான காலங்களில் பக்கபலமாக நின்றவர் என்று அக்கட்சியினர் புகழாரம் சூட்டுகின்றனர்.
நரசிம்ம ராவை வீழ்த்திய பெருமை ஜங்கா ரெட்டிக்கே!
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜங்கா ரெட்டி தனது 87ஆவது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் அமித் ஷா தனது இரங்கல் பதிவில், "முதுபெரும் தலைவர் ஜங்கா ரெட்டியின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன்.
1984 தேர்தலில் பாஜக சார்பில் வென்ற இருவரில் இவரும் ஒருவர். இவர் 1975இல் அவசரநிலை பிரகடன காலகட்டத்தின்போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க தனது பங்களிப்பை வழங்கினார். அவர் பாஜகவை பலப்படுத்தியதை ஒருபோதும் மறக்க முடியாது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜங்கா ரெட்டி குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பெருமையுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்...
- 1984இல் பாஜக வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தபோது, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவை ஹனுமகொண்டா தொகுதியில் வீழ்த்திய பெருமை அத்தேர்தலில் வென்ற ஒருவரான ஜங்கா ரெட்டிக்கு உண்டு.
நாட்டுக்காக ஜங்கா ஆற்றிய பெரும் பங்களிப்பு
மேலும் அவர் ட்வீட்டில், "ஜங்கா ரெட்டியின் மறைவால் நான் மிகுந்த வேதனையும், மன வருத்தமும் அடைந்தேன். இவர் கட்சியை வலுவூட்ட கடுமையாக உழைத்தார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
கிஷன் ரெட்டி அவரது மற்றொரு ட்வீட் பதிவில், "ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஜனசங்கம் நிறுவன உறுப்பினர்களில் ஜங்கா ரெட்டியும் ஒருவராவார். அவசரநிலை பிரகடன காலகட்டத்தில் தெலங்கானாவில் கட்சியை வலிமைப்படுத்துவதில் அயராத உழைப்பைச் செலுத்தினார்.
ரயில்வே துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "ஜங்கா ரெட்டி மறைவு குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். அவர் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் வழங்கிய பெரும் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாஜகவின் முதல் எம்பி மறைவு: மக்கள் மனங்களில் ஜங்கா - மோடி இரங்கல்