பினா (மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் 49 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோகெமிக்கல் வளாகத்தை பினா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (செப் 14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டம் உள்ளிட்ட 10 தொழில்துறை திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இது, கடந்த இரண்டு மாதங்களில் சாகர் மாவட்டத்திற்கு பிரதமர் வரும் இரண்டாவது பயணம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, “ஜி20 வெற்றிக்கான பெருமை மோடிக்கானது அல்ல. இதற்கான பெருமை 140 கோடி மக்களுக்கும்தான். ஜி20 குறித்து கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அறிந்து இருந்தது. திமிர் பிடித்த கூட்டணி (INDIA கூட்டணி) சமீபத்தில் மும்பையில் சந்தித்தது. அவர்கள் எந்தவித கொள்கைகள், பிரச்னைகள் அல்லது தலைவர்கள் பற்றி விவாதிக்கவில்லை. ஆனால், அவர்கள் சனாதன தர்மத்தை அழிப்பதற்கான மறைமுக திட்டத்தைக் கொண்டு உள்ளனர்.
சனாதன தர்மத்தில் இருந்துதான் காந்தி ஒரு உத்வேகத்தைப் பெற்றார். அவரது சுதந்திரப் போராட்டமும் சனாதன தர்மத்தை மையமாகக் கொண்டதுதான். காந்தி தனது வாழ்க்கை முழுவதும் சனாதன தர்மத்தை பின் தொடர்ந்தார். ‘ஹே ராம்’ என்பதே அவரது இறுதி வார்த்தையாக இருந்தது.
அஹில்யாபாய் ஹோல்கர், ஜான்சி ராணி லட்சுமிபாய், சுவாமி விவேகானந்தா மற்றும் லோக்மான்யா திலக் போன்ற சிறந்த வரலாற்றுத் தலைவர்களும் சனாதன தர்மத்தில் இருந்து உத்வேகத்தைப் பெற்றவர்கள். அவர்கள் (INDIA கூட்டணி) வெளிப்படையாகப் பேசத் தொடங்கி உள்ளனர். அவர்கள் அதன் மீது தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி விட்டனர்.