ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் வருகை தந்தனர்.
அங்கு குழுமியிருந்த தொண்டர்களிடையே ஜெபி நட்டா வெற்றி உரையாற்றினார். அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேச மக்கள் பிரதமர் மோடியை நான்காவது முறையாக ஆசிர்வதித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடங்கி, 2017, 2019, 2022 என நான்கு தேர்தலில் உ.பி. மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவானது பிரதமர் மோடி தலைமையில் இந்திய அரசியலை புதிய பாதையை நோக்கி திருப்பியுள்ளது. அடித்தட்டு மக்களுக்காக உழைத்துவருபவர் பிரதமர் மோடி. இந்த உழைப்பை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு 2024 பொதுத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். குடும்ப அரசியலின் தாக்கம்தான் இந்திய அரசியலில் நீண்டகாலம் இருந்துவந்தது. இதை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பும் பிரதமர் மோடிக்கு துணை நிற்கிறது. இது வளர்ச்சிக்கான அரசியலுக்கு கிடைத்த வெற்றி" எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE: மார்ச் 11 ராசிபலன் - உங்க ராசி எப்படி?