லெப்சா: இமாச்சலப்பிரதேச மாநில எல்லையில், பாதுகாப்பு படை வீரர்களுடன், இன்று (நவ.12) பிரதமர் மோடி இனிப்புகளை பகிர்ந்து தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளவில் பாதுகாப்பு துறையில் மிகப்பெரியதாகவும், சிறப்பான சேவையை நமது நாட்டின் ராணுவ வீரர்கள் அளித்து வருவதாகவும், இதன் மூலம் உலக நாடுகளிடையே முக்கியத்துவத்தைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
'இந்திய எல்லையில் பாதுகாப்பான சூழலில் வைப்பதன் மூலம், நாட்டை அமைதியாக வைப்பதில் பெரும் பங்காற்றி வரும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் பணி அளப்பறியது' என்றார். மேலும், 'நீங்கள் இருக்கும் இடம்தான் எனது திருவிழா’ எனவும் லெப்சாவில் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
இதேபோல, இந்தோ - திபெத் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உடையில் பேசிய பிரதமர் மோடி, 'இமயமலை போன்ற எல்லைகளில் துணிச்சலான எனது இதயங்களாக எல்லை பாதுகாப்பு வீரர்கள் இருக்கும் வரையில், இந்தியா பாதுகாக்கப்படும். விடுதலைப் போராட்டத்திற்கு பின்னர், எத்தனையோ போர்களில் எமது ராணுவ வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில், இதயத்தில் இடம் பெற்றுள்ளனர். பண்டிகை காலங்களிலும் குடும்பத்தின் கடமையில் உறுதியாக இருப்பதற்கு, நாடு எப்போதும் உங்களுக்கு கடன்பட்டுள்ளது' என ராணுவ வீரர்களிடம் கூறினார்.
தனது 30 - 35 வயதுகளில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடியது இல்லை எனக் கூறிய மோடி, பிரதமர் ஆன பிறகே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை எல்லைப் பகுதியில் உங்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.
நாட்டுக்காக உயிரையே பணயம் வைத்துள்ள நீங்கள், எல்லைப் பகுதியில் 'பாதுகாப்பான அரண்' இருப்பதாக நிரூபித்து வருகிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் இருப்பிடம் ஒரு கோயிலுக்கு நிகரானது. அவ்வப்போது, ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவதில் ஆயுதப்படை வீரர்களின் பங்கும் மகத்தானது' என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சூடானில் இருந்தும், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பற்றினர் எனவும், இந்தியர்கள் எங்கு ஆபத்தில் இருந்தாலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நமது பாதுகாப்புப் படை வீரர்கள் எப்போதுமே உறுதியோடு இருப்பதாகவும் பெருமிதம் கூறினார்.
சந்திரயான் -3, ஆதித்யா எல்1, ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 100-க்கும் மேலான பதக்கங்களை குவித்தது, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ஜி20 மாநாடு நடத்தியது என மத்திய அரசின் சாதனைகளை அப்போது பட்டியலிட்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது எனக் கூறினார்.
முன்னதாக, தீபாவளி குறித்து அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'அனைவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை வாழ்த்துகள். இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அற்புதமான ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்' என வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழுக்காகப் போராடிச் செத்தவன் ஒருத்தன் இருக்கான்..! அனல் பறக்கும் “ரெபல்” படத்தின் டீசர் வெளியீடு..!