அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பங்கேற்று பேசிவருகிறார். இன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பிரதமர் மோடி உரையாற்றினார். பட்ஜெட் தொடர்பாக பிரதமர் பங்கேற்கும் ஐந்தாவது இணையவழிக் கருத்தரங்கு இதுவாகும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறையினருக்குப் பாராட்டு. இந்த இயக்கம் இந்தியாவின் சுகாதார சேவை முறை பற்றிய திறன் மற்றும் இயக்க ரீதியான தன்மையை நிலைநாட்டியுள்ளது. அனைவருக்குமான, முழுமையான சுகாதாரத்துறையை ஏற்படுத்தும் முயற்சிகள் அவசியம். அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
முதலாவதாக, நவீன அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களை விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தி, அவற்றை சுகாதார முறையில் தீவிரமாக ஈடுபடுத்துவது. மூன்றாவதாக, நவீன மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது.