காந்திநகர்:குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக். 30) அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்று நாம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். பல நாடுகளில் பிரபலமான போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் கார்களை இந்தியா தயாரித்து வருகிறது.
இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. தற்போது இந்தியா உலக அளவில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதில் மிகப்பெரிய நாடாக மாறி வருகிறது. இந்த உற்பத்தி மையம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் போக்குவரத்து விமானங்கள், ஆயுதப்படைகளுக்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, "கலாச்சார மற்றும் கல்வி மையமாகப் புகழ்பெற்ற வதோதரா, விமானத் துறை மையமாக புதிய அடையாளத்தை உருவாக்கும். விமானப் போக்குவரத்து துறையில் உலகின் முதல் மூன்று நாடுகளில் நாம் நுழைய உள்ளோம்.
பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை எடுத்துரைத்த பிரதமர், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். கடந்த 8 ஆண்டுகளில், 160-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் அல்லாமல், பொருளாதாரத்தின் 61 துறைகளில் பரவி, இந்தியாவின் 31 மாநிலங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.