வாரணாசி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இன்று (டிசம்பர் 13) செல்கிறார். அங்கு உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ. 339 கோடி செலவில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 2019 மார்ச் 8ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், கோயிலின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், 12 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இனி காசி விஸ்வநாதர் கோயில், காசி விஸ்வநாதர் தாம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அடையாளம்
கோயிலின் புதிய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் வசதி மையம், உணவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் தாம் வாரணாசிக்கு உலக அடையாளத்தை பெற்றுத்தரும் என்றார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் புதிய வளாகத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன மேலும், கங்கை ஆற்றங்கரையையும், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தையும் இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் பல உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலமைச்சர்கள் மாநாடு
இந்த இரண்டு நாள் பயணத்தில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார். குறிப்பாக, 12 மாநில முதலமைச்சர்களுக்கு இடையிலான மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்.
அம்மாநாட்டில், அசாம் , அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில முதலமைச்சர்களும், பீகார், நாகலாந்தின் துணை முதலமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: Omicron in India: இங்கிலாந்து ரிட்டர்ன் கேரளாவை சேர்ந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி