நேபாளம்:புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று (மே16) காலை நேபாளம் சென்றார். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 5ஆவது முறையாக அவர் நேபாளம் சென்றுள்ளார். லும்பினிக்கு சென்றடைந்த அவரை, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா, அவரது மனைவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் புத்தரின் பிறப்பிடமாக கருதப்படும் லும்பினியில் உள்ள புகழ்பெற்ற மாயாதேவி கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் தேவுபா இருவரும் வழிபாடு நடத்தினர். அங்கு பெளத்த முறைப்படி நடந்த பூஜைகளில் கலந்து கொண்டனர். கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோகர் தூண் அருகே இருநாட்டு பிரதமர்களும் தீபம் ஏற்றினர்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி லும்பினிக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்த கயாவில் வளர்க்கப்பட்டு வரும் போதிமரக் கன்றுக்கு இரண்டு பிரதமர்களும் தண்ணீர் பாய்ச்சினர். இதைத் தொடர்ந்து, லும்பினியில் சர்வதேச பெளத்த மத கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில் அமையவிருக்கும் புத்த கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர், புத்தர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பௌத்த துறவிகள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் நேபாள பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம் மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமரின் நேபாள பயணம் : எல்லைப் பிரச்சினை விவாதிக்கப்படுமா?