பப்புவா நியூ கினியா: ஜி7 உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று(மே.21) பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். அங்கு நடைபெறவுள்ள இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சென்றார். பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை போர்ட் மோர்ஸ்பி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் நேற்று இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாடு இன்று(மே.22) பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடைபெற்றது. இதனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர்.
இந்த மாநாட்டில், இந்திய - பசிபிக் தீவு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.