சென்னை: 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 107 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 107 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், கடின உழைப்பும் நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. நம் இந்திய வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்.
107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால், உலக அரங்கில் நமது மாநிலத்துக்கு பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்.
தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபாடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர். இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும், சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி வெகு சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14வது நாளாக நேற்று இந்திய வீரர்கள் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை குவித்து 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும்.
மேலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி வென்ற 70 பதக்கங்களுடன் ஒப்பிடுகையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி அதிகளவு பதக்கங்களை வென்றுள்ளது.
இதையும் படிங்க:காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு! நாடாளுமன்றத் தேர்தல் யுக்தியா? காங்கிரஸ் போடும் திட்டம் என்ன?