டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று(ஜூலை 20) மாலை இந்தியா வந்தார். டெல்லி வந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர், அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
இதையடுத்து டெல்லியில் இன்று (ஜூலை 21) அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை பொருளாதார நெருக்கடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - இலங்கை இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாகின.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது பல சவால்களை சந்தித்தனர். அப்போது, ஒரு நல்ல நண்பனாக இருந்து இந்தியா அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.