சித்திரை முதல் நாளான இன்று உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடிவருகின்றனர். ஒருவருக்கொருவர் தங்களது புத்தாண்டு வாழ்த்தைப் பகிர்ந்துவருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி அரசியல் தலைவர், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்ப் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தமிழ்ப் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், அஸ்ஸாம் மக்கள் கொண்டாடும் போஹாக் பிஹு பண்டிகை, ஒடிசா மக்கள் கொண்டாடும் மகா பிஷுபா பனா சங்கராந்தி திருநாள், கேரள மக்கள் கொண்டாடி மகிழும் விஷு திருநாள் உள்ளிட்டவற்றிற்கும் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அமித் ஷா தனது ட்விட்டரில், "உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.