புதுடெல்லி:துருக்கி மற்றும் சிரியாவில் இன்று காலை (பிப்.6) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் துருக்கிக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.