டெல்லி:மனதின் குரல் நிகழ்ச்சியின் 92ஆவது பதிப்பில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், "அமுதப் பெருவிழாவின் மூவர்ணம், பாரதத்தில் மட்டுமல்ல. உலகின் பிற நாடுகளிலும் காணக் கிடைத்தது. குறிப்பிட்டு சொன்னால் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் அந்நாட்டைச் சேர்ந்த பாடகர்கள், நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் 75 தேசபக்தி கீதங்களைப் பாடினார்கள். சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த 75 பாடல்கள், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, பாங்க்லா, அசமியா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட நமது மொழிகளில் பாடப்பட்டன.
நான் மேலும் ஒரு சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் முதல் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் ஸ்வராஜ் என்ற ஒரு தொலைக்காட்சித் தொடர் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முதல்காட்சியைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, இதுவரை கேள்விப்படாத வீரர்களை இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் ஒரு மிகச் சிறப்பான முயற்சியாகும். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் சற்று நேரம் ஒதுக்கி, இதைக் காணுங்கள், உங்கள் வீட்டில் உள்ள குழைந்தைகளும் கண்டிப்பாக இதைக் காண ஊக்கப்படுத்துங்கள்.
சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் என்பவர் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருந்தார். அதில் “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டு International Year of Millets, அதாவது சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே நாம் கொண்டாட இருக்கிறோம் என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார். இது கூடவே, நீங்கள் மனதின் குரலின் வரவிருக்கும் பகுதியில், இது பற்றிப் பேசுவீர்களா என்றும் கேட்டிருக்கிறார்.
நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையானது, 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு முன்மொழிவை நிறைவேற்றியது. இது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது.
நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் கூட இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத்தலைவர்கள் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன். இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன.
நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும்.
நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன. நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது, அதுவும் சிறப்பாக சிறிய விவசாயிகளுக்கு என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். உள்ளபடியே மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகி விடும், அதுவும் இதற்கு நீருக்கான தேவையும் அதிகம் இருக்காது. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் குறிப்பாக ஆதாயமளிப்பவை.
இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடம்... பிரதமர் மோடி தொடங்கி வைப்பு...