டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் மானாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவட ஊர்தித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக். 21) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய மோடி, இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி கிராமமாக மனா கிராமம் அறியப்படுகிறது.
என்னைப் பொறுத்தவரை, எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமமாகும். எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் நாட்டின் பலமான காவலர்களாக உள்ளனர். 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டு முக்கிய தூண்களாக நமது பாரம்பரியத்தின் பெருமையும், வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளுமே உள்ளன.
130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவமே. சிலர் கோயில்களின் வளர்ச்சித் திட்டங்களை குற்றமாகக் கருதுகின்றனர். இருப்பினும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்த கோயில்களை புகழ்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். சோம்நாத் கோவில் மற்றும் ராமர் கோவில் கட்டும் போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் மாநிலத்தின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும். இந்த நம்பிக்கையை பெறுவதற்கு பாபா கேதார், பத்ரி விஷாலிடமிருந்து ஆசிகளைக் கோர நான் இங்கே வந்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற ஜெனரல் குர்மித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் தீரத் சிங் ராவத், உத்தராகண்ட் அமைச்சர் தன்சிங் ராவத், பாஜக மாநிலத்தலைவர் மகேந்திர பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்