பெங்களூரு:கர்நாடக மாநிலம் மங்களூருவில் ரூ.3,800 கோடி மதிப்பிலான எந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 2) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "இந்திய வரலாற்றில் இந்த நாள் என்றும் நினைவில் நிறுத்த தக்க நாளாகும். பிராந்திய பாதுகாப்பாக இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பாக இருந்தாலும், இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. இன்று காலை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைந்துள்ளனர். இன்று தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் கர்நாடகாவில் வாழ்க்கையை எளிதாக்குவதையும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் செய்யும்.
ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற திட்டம், மீனவர்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு சந்தை கிடைக்க வழிவகை செய்யும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் பொருள் உற்பத்தித் துறையை விரிவுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை நோக்கிய நாட்டின் முயற்சிகளே வளர்ச்சிக்கான முக்கிய மந்திரம். இத்தகைய முயற்சிகளின் விளைவாக, வெறும் 8 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் திறன் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கர்நாடகா அதிக அளவில் பயனடைந்துள்ளது. சாகர்மாலா திட்டத்தின்கீழ், அதிக அளவில் பயன் பெற்ற மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் சேர்க்கப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. 8 லட்சத்துக்கும் அதிகமான கான்க்ரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் நாட்டில் வெறும் 3 ஆண்டுகளில் ஆறு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.