டெல்லி:வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை அருகே ராகுல் காந்தி தலைமையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
"பெகாசஸ்,தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஆயுதம் என இஸ்ரேல் அரசுவகைப்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதனை இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய அரசின் நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தியுள்ளனர்.
கர்நாடாகவில் ஆட்சியைக் கவிழ்க்கவும், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் இந்த பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இச்செயலை தேசத்துரோகம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தைகளாலும் குறிப்பிட முடியாது" என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்த காங்கிரஸ், சிவசேனா, திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த விவாகரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பெகாசஸ்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை கோரும் திருமாவளவன் எம்பி