அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள நவபாரத் சாகித்ய கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'கல்மனோ கார்னிவல்' எனும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கல்மனோ கார்னிவல் நிகழ்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நவ்பாரத் சாகித்ய கோயில் தொடங்கிய பாரம்பரிய புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பெற்று வருகிறது. புதிய மற்றும் இளைய எழுத்தாளர்களுக்கான தளமாக விளங்குகிறது. அத்துடன் குஜராத்தின் இலக்கியத்தையும் அறிவையும் விரிவுப்படுத்த உதவுகிறது.
புத்தகங்கள் மற்றும் உரைகள் ஆகிய இரண்டும் நமது கல்வி போதனையின் அடிப்படைக் கூறுகள். புத்தகங்கள், ஆசிரியர்கள், இலக்கிய உருவாக்கம் ஆகியவற்றில் குஜராத் வரலாற்று சிறப்புடையது. இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் குஜராத்தின் இளைஞர்கள் உட்பட ஒவ்வொரு பகுதி மக்களையும் சென்றடைய விரும்புகிறேன். அமிர்தப் பெருவிழாவின் போது புத்தகக் கண்காட்சி நடைபெறுவது, அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. ஏனென்றால் சுதந்திரப் போராட்டத்தில் மறக்கப்பட்ட அத்தியாயங்களை நம் நாட்டிற்கு வழங்கி வருகிறோம்.