குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவையொட்டி நேற்று (ஆகஸ்ட் 28) விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு 40 ஆண்டுகளாக வலுவாக உள்ளது. இது இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை குறிக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளன. இந்தியாவில் புல்லட் ரயில் முதல் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் மையம் வரை இந்தியா-ஜப்பான் நட்புறவுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்த நட்பை எனது நண்பரும், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமருமான மறைந்த ஷின்சோ அபேயை அடிக்கடி நினைவு கூர்வார்.
இன்றுள்ள பிரதமர் கிஷிடா இரு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவர அபே மேற்கொண்ட முயற்சிகளை முன்னெடுத்து செல்கிறார். நமது முயற்சிகள் எப்போதும் ஜப்பான் மீது மரியாதை கொண்டவை. அதனாலேயே சுசூகியுடன் 125 ஜப்பான் நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன. 4 தசாப்தங்களாக மாருதி சுசூகியின் வளர்ச்சி இந்தியாவிற்கும் மக்களுக்கும் பொருளாதார உறவுகளை வழங்குகிறது.
இந்திய சந்தையின் வலிமையை உணர்ந்ததற்காக சுசூகி நிர்வாகத்திற்கு நன்றி. இந்த வெற்றிக்கு இந்திய மக்கள் மற்றும் அரசின் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமடைந்து வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:புறநானூறு, தொல்காப்பியத்தை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி