டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள குதுப் மினார் வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்து மற்றும் சமண தெய்வங்களை மீட்டெடுப்பதற்கும், அங்கு வழிபடுவதற்கும் உரிமை வழங்கக்கோரி டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சமண தெய்வம் தீர்த்தங்கர் பிரபு ரிஷாப் தேவ் மற்றும் இந்து தெய்வ பகவான் விஷ்ணு சார்பாக முறையே ஹரிசங்கர் ஜெயின், ரஞ்சனா அக்னிஹோத்ரி, ஜிதேந்திர சிங் பிசன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
அந்த மனுவில், "மம்லுக் பேரரசர் குதுப்-உத்-தின் ஐபக் 27 இந்து மற்றும் சமண கோயில்களை அகற்றிவிட்டு, வளாகத்திற்குள் குதுப் மினாரைக் கட்டியுள்ளார். ஐபக்கால் கோயில்களை முற்றிலுமாக இடிக்க முடியவில்லை மற்றும் கோயில்களின் இடிபாடுகள் மீது ஒரு மசூதியைக் கட்டியிருந்தார்.
வளாகத்தின் சுவர்கள், மொட்டை மாடி மற்றும் தூண்களில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டமைப்பில் சிவன், விநாயகர், கணேஷ், தேவி கௌரி, சூரியன், ஹனுமன் ஜெயின் தீர்த்தங்கர்கள் உள்ளிட்ட அனைத்தும் மீட்கப்பட்டு கோயில் வளாகத்தில் முறையாக பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும்.