உத்தரகாண்ட்:நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வேலையின்மையின் விகிதம் அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் வேலை தேடி சோர்ந்துபோன இளைஞர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதேபோல், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்யும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'பிளேபாய்' (Playboy jobs) வேலைக்கு ஆட்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. டேராடூன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்கள் மற்றும் மின்கம்பங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், "பிளேபாய் வேலைக்கு ஆட்கள் தேவை. நாள் ஒன்றுக்கு ஊதியமாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வழங்கப்படும். பயணப்படி மற்றும் உணவு வழங்கப்படும். வேலையில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக 2,000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான QR குறியீடு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். கட்டணம் செலுத்தியபின் வேலையில் சேரவில்லை என்றால், கட்டணம் திருப்பித் தரப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.