உத்தரகாசி: உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கும் பிரம்மகால் - யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தபோது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கத்தில் தீடீரென நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 15 நாட்களாக பல தடங்கல்களைத் தாண்டி மீட்புப் பணியானது அதிதீவிராமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், எந்த முயற்சி எடுத்தாலும் அது பாதியிலேயே தோல்வியடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆகர் இயந்திரம் மூலம் செங்குத்தாக துளையிடும் பணியானது நடந்து வந்த நிலையில், தற்போது ஆகர் இயந்திரம் சேதமடைந்துவிட்டது. ஆகையால், துளையிட்ட பகுதிக்குள் உள்ள இயந்திரத்தின் துகள்களை அகற்ற ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அடுத்தடுத்து தடங்கல்கள் வருவதால், பணியிலும் அதிக தாமதம் ஏற்பட்டு, தொழிலாளர்களை மீட்கும் பணியானது தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தம் மற்றும் கவலையைப் போக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (BSNL) தரைவழி தொலைபேசியை வழங்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரி குந்தன் கூறியதாவது, “சுரங்கத்தில் சிக்கியவர்கள் அவர்கள் குடும்பத்துடன் பேசுவதற்காக, தொழிலாளர்களை மீட்பதற்காக இணைக்கப்பட்ட குழாய் வழியாக, ஒரு சிறிய லேண்ட்லைன் தொலைபேசியை அனுப்ப உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
இடர்பாடுகளில் உள்ள ஆகர் பிளேடு மற்றும் இயந்திரத்தை அகற்ற எவ்வளவு நேரம் ஆகும் என மைக்ரோ சுரங்கப்பணி நிபுணரிடம் கேட்ட போது, "அது எங்களுக்கு தெரியாது. பணியைப் பொறுத்தே உள்ளது. சில நேரம், சிறிய துண்டுகளை அகற்றி வெளியே எடுக்கிறோம். சில நேரம் பெரிய துண்டுகள் எடுக்கப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தில் சிக்கிய ஆகர் பிளேடுகளை எடுக்க ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆகரை அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
தேசிய பேரிடர் மீட்புப்படை மேலாண்மை (NDMA) ஆணையத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர் சையத் அட்டா ஹஸ்னைன் கூறியதாவது, “சுரங்கப்பாதை மீட்புப் பணியில் கடந்த 24 மணி நேரமாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஏனெனில், ஆகர் இயந்திரம் தற்போது சேதமடைந்துவிட்டது. உண்மையைக் கூறினால் அது உடைந்துவிட்டது. தற்போது அந்த உடைந்த பகுதியை முதலில் வெளியே எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை மற்றும் பனிப்பொழிவு பெய்ய உள்ள நிலையில், அதன் காரணமாக மீட்புப் பணியில் மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறியதாவது, “சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் வரும் கிறிஸ்துமஸ்-க்குள் மீட்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். தற்போது வரை அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் அவசரப்பட்டால், அது வேறொரு சிக்கலை ஏற்படுத்தலாம். ஆகையால் நாங்கள் மிகக் கவனமாக உள்ளோம். நிச்சயம் நல்ல செய்தி வரும்" என தெரிவித்தார்.
சட்லெஜ் ஜல் வித்யுத் நிகாம் (SJVN) நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களது நிறுவனத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழு துளையிட தயாராக உள்ளது. இதனை செய்ய 5 முதல் 6 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும், சுமார் 85 முதல் 90 மீட்டர் வரை துளையிட வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வனிதா விஜயகுமாரை முகத்தில் தாக்கிய மர்ம நபர் - பிக்பாஸ் பிரபலம் மீது குற்றச்சாட்டு!