டெல்லி :நாடளுமன்ற கூட்டத்தின் போது அவசியமின்றி அவையை தவிர்த்ததாக 23 பாஜக எம்.பிக்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடிந்து கொண்டார்.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்பட்டு உள்ளது.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததாக பாஜக எம்.பிக்கள் 23 பேரை மத்திய அமைச்சரும், மாநிலங்களவை தலைவருமான பியூஷ் கோயல் கடிந்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறைக்கு 23 எம்.பிக்களையும் அழைத்து வீண் காரணங்களுக்காக அவையை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தான் நாடாளுமன்றத்தின் அனைத்து கூட்டங்களையும் தவறாமல் கலந்து கொள்வதாகவும், உணவு இடைவேளையின் போது மட்டுமே அவையை விட்டு வெளியேறுவதாகவும் என பாஜக எம்.பிக்களை பியூஷ் கோயல் அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நடப்பு மழைக் கால கூட்டத் தொடரில் டெல்லி அவசர சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநிலங்களவையில் பாஜக எம்.பிக்கள் முழுமையாக கலந்து கொண்டு மசோதாக்களை நிறைவேற்றிவிட வேண்டும் என பியூஷ் கோயல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறது. அதேநேரம் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக எம்.பிக்கள் அவையில் முழுமையாக கலந்து கொண்டு தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும் என பியூஷ் கோயல் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :5வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்ந்த சந்திரயான்-3 விண்கலம்; இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!