தமிழ்நாடு

tamil nadu

வரலாற்றை மாற்றி எழுதி செங்கொடியைப் பறக்கவிட்டார் பினராயி

By

Published : May 2, 2021, 9:12 PM IST

பினராயி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவருக்கு சவால்களே பின்தொடர்ந்து வரத்தொடங்கின. இருப்பினும் இவை அனைத்தையும் உறுதியாக எதிர்கொண்ட முதலமைச்சர் என்ற பெயருடன் எழுந்து நிற்கிறார் பினராயி விஜயன்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

ஜனநாயகத் தேர்தல் அரசியலில் கேரளாவிற்கு ஒரு தனிப்பெருமை உண்டு. உலகின் முதல் ஜனநாயக கம்யூனிச அரசு கேரளாவில்தான் உருவானது. 1957ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரபாட் முதலமைச்சரானார்.

அன்று தொடங்கி இன்று இந்தியாவில் இடதுசாரிகள் உயிர்ப்புடனும் வீரியத்துடனும் அரசியல் செய்யும் ஒரே மாநிலமாக கேரளா மட்டும்தான் உள்ளது. அண்மை காலத்தில் மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில்கூட கட்சி சுருங்கிப் போனது.

140 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதே வழக்கம். ஒரே கட்சி மீண்டும் இரண்டாவது முறை வெற்றிபெறுவது அபூர்வமே.

2011ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து உம்மன் சாண்டி முதலமைச்சாரனார். அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிக்கவே பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

இம்முறை, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகளின் எல்.டி.எஃப். கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சி 77 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 63 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணியில், காங்கிரஸ் 93 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 47 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜக கூட்டணியில் பாஜக 113 தொகுதிகளிலும் மற்றக் கூட்டணிக் கட்சிகள் 27 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

பினராயி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவருக்கு சவால்களே பின்தொடர்ந்து வரத்தொடங்கின. ஆண்டுதோறும் புயல் வெள்ளம், நிபா வைரஸ் தொடங்கி கரோனா வரை சுகாதாரப் பேரிடர், சபரிமலை போன்ற மத உணர்வு சார்ந்த நெருக்கடி என சவாலான காலக்கட்டதையே அவருக்கு ஆட்சிக்கட்டில் தந்தது.

இருப்பினும் இவை அனைத்தையும் உறுதியாக எதிர்கொண்ட முதலமைச்சர் என்ற பெயருடன் எழுந்து நிற்கிறார் பினராயி விஜயன்.

அமைச்சர்களுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தங்கக்கடத்தல் சர்ச்சை போன்ற விவகாரங்கள்கூட பினராயி விஜயனின் பிம்பத்தைப் பெரிதாகச் சீண்டவில்லை. இதைப் பிரதிபலிக்கும் சுமார் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளார். காங்கிரஸ் கூட்டணிக்கு 45-க்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளன.

கட்சிக் கூட்டத்தில் பினராயி

இதையடுத்து, கேரளாவில் மீண்டும் பினராயி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வரலாற்றை மாற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரளத்தில் செங்கொடியைப் பறக்கவிட்டுள்ளார் பினராயி விஜயன்.

ABOUT THE AUTHOR

...view details