மும்பை: நடிகர் மாதவன் நடித்த 'ரன்' திரைப்படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெரு கடையில் சாப்பிடுவார். ஆனால், அது காக்கா பிரியாணி என பின்னரே அவருக்கு தெரியவரும். இந்த அதுபோன்ற சம்பவம் ஒன்று மும்பையில் நடைபெற்று வருவதாக பலரும் புகார் அளித்து வருகின்றனர்.
மும்பையில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டுபிடித்தார். தொடர்ந்து அவரே இது குறித்த விசாரணையை தொடங்கினர். இது சம்பந்தமான சில புகைப்படங்களை சேகரித்தார்.
ஆதாரங்களை சேகரித்த பிறகு, அவர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். கேப்டன் ஹரிஷின் புகாரின்படி, "அபிஷேக் சாவந்த் என்பவர் 2022 மார்ச் முதல் மே வரை தனது வீட்டின் மேற்கூரையில் புறாக்களை வளர்த்து வந்தார். பின்னர் மும்பையில் உள்ள சில ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக அவற்றை விற்றார்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில புகைப்படங்களையும் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பறவைகளுக்கு எதிராக பொது நோக்கத்துடன் குற்றம் செய்ததற்காக சியோன் காவல் நிலையத்தில் 34, 429 மற்றும் 447 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தில் எலியைக் கொடூரமாக கொன்றவர் மீது வழக்குப்பதிவு