தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சின் தடுப்பூசி: எய்ம்ஸில் தொடங்கிய 3ஆம் கட்ட பரிசோதனை! - கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

கோவாக்சின்
கோவாக்சின்

By

Published : Nov 26, 2020, 7:10 PM IST

கரோனா வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனை நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்தப் பரிசோதனையில் 26 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி மருந்தை முதலில் மருத்துவர் ஸ்ரீவஸ்தவா செலுத்திக்கொண்டார். பின்னர் வரும் நாள்களில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள்.

முதலில் தடுப்பூசியின் 0.5 மில்லி டோஸ் நான்கு தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் இரண்டு மணி நேரம் கண்காணிப்பில் இருந்தனர். மேலும், அடுத்த சில நாள்களுக்கு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து டாக்டர் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "கோவாக்சின்தான் முதன்முதலில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசியின் சோதனையில் எங்கள் நிறுவனமும் பங்கேற்கிறது. தடுப்பூசி பெற்ற முதல் தன்னார்வலராக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது நன்றாக இருக்கிறேன், முழு உத்வேகத்துடன் பணி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இது தவிர, நான்கு தடுப்பூசிகள் சோதனை இந்தியாவில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும் ஆக்ஸ்போர்டும் இணைந்து உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதேபோல், ஜைடஸ் காடிலா நாட்டில் உருவாக்கிய தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் முடிவடைந்துள்ளது. மேலும், டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் விரைவில் ரஷ்ய COVID-19 தடுப்பூசி ஸ்பூட்னிக் V இன் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details