ஹைதராபாத்:திருநங்கைகள், திருநம்பிகள், பால்புதுமையினர் உள்ளிட்ட "எல்.ஜி.பி.டி.க்யூ+"-ஐச் சேர்ந்தவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பலருக்கும் எந்தவித காரணமும் இல்லாமல் இவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தியில் சிக்குண்டு இருந்தாலும், தங்களுக்கான உரிமைகளைப் பெற இவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேபோல், "எல்.ஜி.பி.டி.க்யூ+" பிரிவினரின் மேம்பாட்டுக்காக அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்றாம் பாலினத்தவருக்கு இடம் வழங்கியுள்ளன.
அந்த வகையில், கடந்த ஆண்டு தெலங்கானா மாநில அரசு முதல் முறையாக இரண்டு திருநங்கை மருத்துவர்களை அரசு மருத்துவர்களாக நியமனம் செய்தது. பிராச்சி ராதோர், ரூத்பால் ஜான் இருவரும் ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதில், மருத்துவர் ரூத்பால் கடந்த 2018ஆம் ஆண்டு ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார். இவர் திருநங்கை என்பதால், தனியார் மருத்துவமனையில் வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூத்பால் அரசு மருத்துவராக நியமனம் செய்யப்பட்டார். தான் ஆதரவற்றவர் என்பதால், தன்னைப் போன்ற ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது நோக்கம் என ரூத்பால் கூறியிருந்தார்.