எர்ணாக்குளம்:கேரள மாநிலம் பாலக்காட்டில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, சஞ்சித்தின் மனைவி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 5ஆம் தேதி, நீதிபதி ஹரிபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றினால், விசாரணையை முடிக்க தாமதமாகும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், நீதிபதி தீர்ப்பின்போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆகியவை தீவிரவாத அமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. இந்த இயக்கங்கள் கடுமையான வன்முறை செயல்களில் ஈடுபட்ட போதிலும், அவை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதியில் மீண்டும் கள ஆய்வு தொடக்கம்...பலத்த போலீஸ் பாதுகாப்பு...!