ராஞ்சி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதுமட்டுமல்லாமல் வரலாற்றிலேயே முதன்முறையாக டீசலும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.
இதன்காரணமாக, மத்திய அரசு நவம்பர் 4ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது.
இதையடுத்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. அதன்படி டெல்லி, கர்நாடக மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், இந்த விலை குறைப்பு நடவடிக்கை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள விலை தொடரும்.
இந்த விலை குறைப்பு வரும் ஜனவரி 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்தார். இன்று அம்மாநிலத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 98.48 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க:நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?