விஜயவாடா: ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சந்திரபாபுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக்காவலில் வைக்குமாறும் சந்திரபாபுவின் வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது தனது வாதங்களை முன்வைத்த சந்திரபாபுவின் வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, மத்தியச் சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், முன்னாள் முதல்வரைக் கடுமையான குற்றவாளிகள் உள்ள சிறையில் அடைப்பது முறையல்ல என்றும் கூறினார்.
மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் பாதுகாப்பு இருக்கிறது. அவர் இதுவரை தேசியப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பின் கீழ்தான் உள்ளார். அதுமட்டும் அல்லாது சந்திரபாபு நாயுடுவுக்கு வயது 73 ஆகிறது, அவருக்குச் சர்க்கரை நோய் மற்றும் பிபி ஆகியவை உள்ளன ஆகவே அவருக்கு வீட்டுக்காவல் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.