பீகார்: முஷாபர்பூர் சிவில் நீதிமன்றத்தில் இன்று (செப்.04) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது மீது வழக்கறிஞர் சுனில் குமார் ஓஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சனாதன தர்மத்திற்கு எதிராக அவர்கள் கருத்து தெரிவித்ததாகவும், இந்த கருத்தானது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சுனில் குமார் ஓஜா கூறுகையில், “உதயநிதி ஸ்டாலினின் கருத்தானது இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. ஆகையால், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது மகன் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது; அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கைச் செப்டம்பர் 14ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும்” என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை (செப்.2) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கரோனா, டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேலும், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது சனாதன தர்மம், அதனை ஒழிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.