புதுச்சேரி: கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர், செவிலியர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ராஜ்பவனில் வைத்து பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை பரிசுகளை வழங்கினார்.
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய தமிழிசை, “புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்று 100-ஐ தாண்டியுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தடுப்பூசி போடுவதற்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் 18 முதல் 40 வரை வயதினர் தயக்கமில்லாமல் தடுப்பூசிசெலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காட்டிவருகின்றனர். அவர்கள் தயக்கத்தை விட்டுவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தெலங்கானாவில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் விநாயகர் சிலை தெருக்களில் வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை. அரசும் அனுமதி அளித்துள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, இறைவனை வழிபாடு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. திருவிழா நடத்தவும் தடை இல்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்