புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதிலும், இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு இடங்களில் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்ட நிலையில், அறப்போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு ஒரு வரலாற்றுப்பிழை என புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் கூறுகையில், 'ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பெரிய வேதனை தரக்கூடியதாக உள்ளது. இது போன்ற பல குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும், அவர்களுக்குத் தராத சலுகையை மத்தியிலுள்ள பாஜக ஆட்சியின் துணையோடு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு வழங்கி விடுதலை செய்துள்ளது.
வரலாற்றுப் பிழை: இதை ராஜிவ் காந்தி கொலை வழக்காக மட்டும் பார்க்காமல் பொதுவாக பார்க்க வேண்டும். ஏனென்றால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளை அழிக்கக்கூடிய ஆயுதமாக இதனைப் பார்க்கலாம். ஆனால், இன்று நடைபெற்றுள்ள இந்த நிகழ்வால் எதிர்காலத்தில் நம்முடைய பல தலைவர்களை நாம் இழக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. ஆட்சியில் வந்துவிடுவார்கள் என்ற நேரத்தில், அதன் தலைவரை அழித்துவிட்டால் நிச்சயமாக அந்த நாட்டை அழித்து விடலாம் என்று வெளிநாட்டு சக்திகளுக்கு ஊக்கம் தருகின்ற நிகழ்வாகத்தான் இதைப் பார்க்கவேண்டும்.