டெல்லி:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெடுங்காலமாக நடைபெற்று வரும் பேரறிவாளனின் விடுதலை வழக்கில் இன்று(மே 18) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் தீர்ப்பாகவும் இது உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையில் “பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சென்ற மே 12 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா எனவும், கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் எனவும், இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டன.