மும்பை:தாராவி... இந்த பெயரை கேள்விப்படாத தமிழர்கள் இருக்க முடியாது.. கமல்ஹாசனின் நாயகனில் தொடங்கி, சூப்பர் ஸ்டாரின் காலா, யங் சூப்பர்ஸ்டார் எஸ்டிஆரின் வெந்து தணிந்தது காடு வரையிலும் இந்த பகுதியைத் தழுவியே கதைக்களங்கள் திரையில் படமாக்கப்பட்டன. இந்தப் பகுதிக்கு எப்படி தமிழர்கள் வந்தார்கள் என்ற கதை நூற்றாண்டு தொடர்புடையது.
தொழில் இல்லாத நாட்களில் பிழைப்புக்காக தமிழ்நாட்டிலிருந்து பரவிய மக்கள் நாடு முழுவதும் குழுக்களாக வசித்து வருகின்றனர். தாராவிக்கும் அப்படிப்பட்ட ஒரு பஞ்சகாலத்தில் தான் தமிழ்நாட்டிலிருந்து குடியேற்றம் நிகழ்ந்தது.
எங்கு திரும்பினாலும், விண்ணை முட்டும் கட்டடங்கள், சர்வதேச நிறுவனங்களின் கிளைகள் என ஒரு வணிகத் தலைநகருக்கு தேவையான அத்தனை அம்சங்களோடு, இந்தி திரையுலகின் தலைநகராகவும் இருக்கும் மும்பையில், இதற்கு சற்றும் தொடர்பில்லாத ஏழ்மையை பறைசாற்றும் இடமாக உள்ளது, தாராவி. பத்துக்கு பத்து அறைகளில் ஏழெட்டுபேர் தங்குவது இங்கு மிகச்சாதாரணம். ஆனால், இந்த ஏழ்மை தான் எங்களின் வாழ்வாதாரம் எனக் கூறுகின்றனர், தாராவிவாசிகள். இங்கு கிடைப்பதைப் போன்ற தொழில் வாய்ப்புகள் வேறெங்கும் இவர்களுக்கு வாய்க்க வழியில்லை. இந்த ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியை, சீரமைக்கும் திட்டத்தில் தற்போது புதிய முனைப்பு ஏற்பட்டுள்ளது.
எந்த அரசு வந்தாலும் தாராவி அவர்களுக்கு நகருக்கு திருஷ்டி பொட்டாக தெரிகிறதோ என்னவோ, இதனை சீரமைக்கத் தான் முயற்சி செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாராவி குடிசை மாற்று வாரியத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் திட்டம் ஏலத்தின் வாயிலாக அதானி குழுமத்திற்கு கிடைக்கப்பெற்றது. அதனைத்தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களால் இந்த திட்டம் கிடப்பில்போடப்பட்ட நிலையில் தற்போது அதற்கான ஆணையை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது, மஹாராஷ்டிரா அரசாங்கம்.
2.8 சதுர கிலோமீட்டர் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கியிருக்கும் தாராவியை மக்கள் 'மினி இந்தியா' என அழைக்கும் நிலையில் இங்கு, மண்பாண்டங்கள் முதல் தோல் பொருட்கள் வரை பல தொழில்களின் முக்கியப் பகுதியாக இருக்கிறது.