டெல்லி: ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து இந்தியா - பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (மே 21) பப்புவா நியூ கினியாவுக்கு சென்றடைந்தார். அந்நாட்டுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே. மேலும் மோடியின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பி நகரில் இந்தியா - பசிபிக் தீவுகள் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது. இதில் 14 பசிபிக் தீவு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், "இன்றைய காலகட்டத்தில் நமது விநியோக சங்கிலி கடுமையான இடையூறை சந்தித்து வருகிறது. எரிபொருள், உணவு, உரம், மருந்துப் பொருட்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நாம் மிகவும் நம்பியவர்கள், நெருக்கடியான சூழலில் நமக்கு தேவைப்படும் நிலையில் உடன் நிற்கவில்லை.
கொரோனா தொற்றால் உலகளாவிய தெற்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், வறுமை, சுகாதாரம் தொடர்பான சவால்கள் ஏற்கனவே இருந்தன. தற்போது புதிய பிரச்னைகள் உருவெடுக்க தொடங்கியுள்ளன. நெருக்கடியான நேரங்களில் இந்தியா பசிபிக் தீவு நட்பு நாடுகளுக்கு ஆதரவாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, "உலகளாவிய பிரச்னைகளால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பிரதமர் மோடி தெற்கு நாடுகளின் தலைவர். உலகளாவிய மன்றங்களில் அவரது பின்னால் அணி திரள்வோம்" என்றார்.