பாட்னா: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் போலி மதுபானத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அம்மாவட்டத்தில் உள்ள பூவல்பூர் கிராமத்தில் ராம்நாத் என்பவர் வேறு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் நேற்று முன்தினம் இரவு (ஆக. 11) இரவு மதுபானம் வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, அவரின் உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அந்த மதுவை அருந்தியுள்ளனர். அன்று இரவு ராம்நாத் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால், அவரின் உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், ராம்நாத் வாங்கி வந்த மதுவை அருந்திய பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த லோஹா (எ) காமேஷ்வர் மஹ்தோ, ராஜேந்திர ராம் (எ) ராம்ஜீவன், ரோஹித் சிங், பபு சிங் மற்றும் ஆவ்தா கிராமத்தைச் சேர்ந்த அலாவுதீன் கான் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரவித்துள்ளனர். மது வாங்கி வந்த ராம்நாத் உள்பட சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரண் மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும், போலி மதுபானத்தால் இதுபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ளது. கடந்த ஆக. 4ஆம் தேதி, பெல்டி மற்றும் மேக்கர் காவல் நிலையங்களின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் தங்களின் கண் பார்வையை இழந்தனர். பீகாரில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், இதுபோன்று போலி மதுபானத்தால் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதையும் படிங்க:எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்கிறார் நிதிஷ் குமார்