அமராவதி:ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா. இவர், தனது சொந்த முயற்சியில் கரோனாவுக்கு மருந்தினை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்தை உட்கொண்டவர்கள் கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.
இவரின் மருந்து குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவரிடம் மருந்து வாங்க கிருஷ்ணாபட்டணம் வரத்தொடங்கினர். முதல் நாளில் 500 பேருக்கு மருந்து வழங்கிய அவரிடம், நாளுக்கு நாள் மருந்து வாங்க மக்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்து கிருஷ்ணாபட்ணம் வந்த நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அவர் வழங்கும் மருந்தின் தரத்தை சோதிப்பதற்காக மருந்தைக் கைப்பற்றி மருந்து விநியோகத்திற்கும் தடை விதித்தார். இந்நிலையில், சில நாட்கள் மருந்து விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
நேற்று மீண்டும் மருந்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று கிருஷ்ணாபட்டணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து மீண்டும் குவியத்தொடங்கினர். நெல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களைச் சேர்ந்தோரும் இந்த மருந்தினை வாங்க வந்திருந்தனர்.