நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து கணிசமாகப் பதிவாகி வரும் நிலையில், மக்கள் ஒருபுறம் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். ஆனால், மற்றொருபுறம் அறிவியலுக்கு புறம்பாக பல வழிகளிலும், குறிப்பாக மூட நம்பிக்கைகளை சார்ந்தும் ஆதாயம் தேடி வருகின்றனர்.
அந்த வகையில் மத்தியப் பிரதேசம், ராஜ்கர் மாவட்டத்தில் கடவுள் தங்கள் மீது இறங்கியதாகக் கூறிய இரண்டு பெண்களிடம் ஆசிர்வாதம் பெற நூற்றுக்கணக்கான மக்கள் தனி மனித இடைவெளி பேணாமல் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கர் மாவட்டம், சட்டு கேடா கிராமத்தில், தங்கள் மீது கடவுள் இறங்கியதாகவும், கிராமத்தில் எவருக்கும் கரோனா வராமல் தடுக்க புனித நீர் அளிப்பதாகவும் இரண்டு பெண்கள் கூறியுள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த எவருக்கேனும் கரோனா வந்தாலும் தாங்கள் அளிக்கும் இந்தப் பிரசாதத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படுத்தாமல் கரோனா பயந்து ஓட்டம்பிடித்துவிடும் என்றும் கூறிள்ளனர்.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் புனித நீர் வாங்கி குடிக்கும் மக்கள் இந்நிலையில், இதனை நம்பி அங்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல், முகக்கவசங்கள் அணியாமல் நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களிடம் பிரசாதம் பெறக் கூடியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒன்று கூடிய மக்கள்! ஜூன் 1ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.